ஆசிய விளையாட்டு தகுதிப் போட்டியில் வினேஷ் போகத்தை அனுமதிக்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக்கொண்டுள்ள இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் வரும் 30 மற்றும் 31-ம் தேதிகளில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு தகுதி போட்டியில் பங்கேற்க தன்னை அனுமதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா, நீதிபதி தேஜாஸ் கரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பளித்துள்ளது. அதில், “மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பியுள்ள வினேஷ் போகத் போன்ற புகழ்பெற்ற வீராங்கனையைச் சிறப்புக் கருணையுடன் இந்தப் போட்டிக்கு பரிசீலிக்க வேண்டும். பிரபல வீராங்கனைகளுக்கு விதிவிலக்கு அளிக்கும் வகையில் இந்த கொள்கை இருந்திருக்க வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக அந்தக் கொள்கையில் அந்த விதிவிலக்கு இல்லை.
இருந்தபோதும் அவர் ஆசிய விளையாட்டு தகுதிப் போட்டியில் பங்கேற்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. மேலும், இந்தத் தகுதிப் போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்கும் விளையாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் இந்திய மல்யுத்த சம்மேளனம் வீடியோவில் பதிவு செய்யவேண்டும். அப்போது இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய விளையாட்டு ஆணையம் ஆகியவற்றின் தனிப்பட்ட பார்வையாளர் கட்டாயம் இருக்கவேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு இந்த உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் வெளியிட்டது. அது அதிகாரப்பூர்வமாக நேற்று காலை உயர் நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.