Select Location
All Locations
State
Region
City / District
"நடிகைகள் தங்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்" - 'பெத்தி' விவகாரம் குறித்து நித்யா மேனன்

"நடிகைகள் தங்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்" - 'பெத்தி' விவகாரம் குறித்து நித்யா மேனன்

ராம் சரண் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'பெத்தி'. புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தில் நடிகை ஜான்வி கபூர் 'அச்சியம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஜான்வியின் கதாபாத்திரம் காட்டப்பட்ட விதம், தவறான கேமரா கோணங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, துன்புறுத்தல், சம்மதமில்லா செயல் ஆகியவற்றை சாதாரணமாக்குவது போன்ற வசனங்கள் ஆகியவை இணையதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை எவ்வாறு எழுத வேண்டும், எப்படித் திரையில் காட்ட வேண்டும் என்பது குறித்த விவாதங்களும் இதனால் தீவிரமடைந்தன.

இதனைத்தொடர்ந்து அந்தப் படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக நடிகை நித்யா மேனன் பேசியிருக்கிறார். 'நடிகைகள் ஒவ்வொருவரும் நடிப்பில் தங்களுக்கு எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். தன்னை ஒரு பொருளாக பார்ப்பதை ஏற்க முடியாது என்று உறுதியுடன் இருக்க வேண்டும்.

என்னைப் பொருத்தவரை நான் ஏற்க விரும்பும் கதாபாத்திரங்களில் எப்போதும் தெளிவாக இருப்பேன். இதுபோன்ற விஷயங்கள் தென்னிந்திய சினிமாவில் மட்டும்தான் நடக்கிறது என்று கூற முடியாது. இது எல்லா இடங்களிலும் நடக்கிறது. சினிமா ரொம்ப கமர்ஷியலாக மாறியதுதான் இந்தத் பிரச்னைக்கு மூலக்காரணம் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.


Vikatan 1 hour ago
Home Flash News