Select Location
All Locations
State
Region
City / District
முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!

முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!

முதல்வரின் மாநில இளைஞர் விருது – 2026க்கான விண்ணப்பங்களை வரும் ஜூலை 6ஆம் தேதி மாலை 5.45 மணி வரை இணையவழியில் சமர்ப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் மலதி ஹெலன் தெரிவித்துள்ளார். சமூக முன்னேற்றம் மற்றும் பொதுநலப் பணிகளில் சிறப்பாக செயல்படும் இளைஞர்களை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களும், மூன்று பெண்களும் தேர்வு செய்யப்படுவர். விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை, பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

2026ஆம் ஆண்டுக்கான விருதுகள், ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் 15 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், 2025 ஏப்ரல் 1 முதல் 2026 மார்ச் 31 வரை மேற்கொண்ட தன்னார்வ சமூகப் பணிகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பிக்கும் நபர் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்திருக்க வேண்டும். சமூக நலனுக்காக மேற்கொண்ட தன்னார்வப் பணிகள் அளவிடக்கூடியதாகவும், உறுதிப்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், இருப்பிடச் சான்று, காவல்துறை நன்னடத்தைச் சான்று மற்றும் சமூகப் பணிகளுக்கான ஆதார ஆவணங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். தகுதியுடையோர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், சாதனைகள், செய்தி வெளியீடுகள் மற்றும் சான்றிதழ்கள் அடங்கிய மூன்று தொகுப்பு ஆவணங்களை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் அல்லது 7401703480 என்ற எண்ணில் தகவல் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Smacy News 2 hours ago
Home Flash News