11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது பத்மநாப சுவாமி கோயில் ஐப்பசி திருவிழா
திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோயில் ஐப்பசி திருவிழா வரும் 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மறுநாள் முதல் நவராத்திரி விழாவும் தொடங்குகிறது. பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ஐப்பசி திருவிழா வரும் 11ம் தேதி காலை 8.30க்கும் 9 மணிக்கும் இடையே கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவராத்திரி விழாவுக்காக குமரி மாவட்டத்தில் இருந்து புறப்படும் சுவாமி விக்கிரகங்கள் அன்று மாலை பத்மநாபசாமி கோயிலை அடையும்.
மறுநாள் 12ம் தேதி முதல் நவராத்திரி விழா தொடங்கும். ஐப்பசி திருவிழாவும், நவராத்திரி விழாவும் இணைந்து வருவது மிகவும் அபூர்வமாகும். திருவிழா 9ம் நாளான 19ம் தேதி பள்ளிவேட்டையும், மறுநாள் (20ம் தேதி) ஆறாட்டும் நடைபெறும். அன்றைய தினம் மாலையில் பத்மநாபசாமி கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் இருக்காது. 20ம் தேதியுடன் இவ்வருட ஐப்பசி திருவிழா நிறைவடையும்.