திருத்தணி முருகன் கோயில் விரிவாக்க பணிக்காக கிழக்கு கோபுரம் மூடல்!!
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் மாட வீதி விரிவாக்கம் மற்றும் ராஜ கோபுரத்துடன் இணைப்பு பணிகளுக்காக கோபுரம் பகுதி மூடப்பட்டது. இதற்கு ஈடாக மேற்கு கோபுரம் வழியாக சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், சிறப்பு பெற்ற திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், மலைக் கோயிலில் வசதிகளை மேம்படுத்தும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ் ரூ.103 கோடி மதிப்பீட்டில் மாற்று மலைப்பாதை திட்டம், கோயில் நுழைவுவாயில் விரிவுப்படுத்துதல், முழுநேர அன்னதான கூடம் விரிவாக்கம், ராஜகோபுரம், மாட வீதி இணைப்பு, கடைகள் கட்டுமான பணிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக ராஜகோபுரத்துடன் மாட வீதி இணைத்து விரிவு படுத்தப்பட உள்ளது.
இதற்காக அம்மா இளைப்பாரும் மண்டபம் இடிக்கப்பட்டது. மேலும் கிழக்கு கோபுரம் பகுதி பேரிகாட் அமைத்து முழுமையாக மூடப்பட்டுள்ளது. பக்தர்கள் மேற்கு கோபுரம் வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய நேற்று முதல் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் கிழக்கு கோபுரம் பகுதி முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதால், கோயிலில் நடைபெற்ற தங்கத்தேர், வெள்ளி மயில் வாகனம், வெள்ளி தேர் உள்பட உற்சவர் வாகன சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.