9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இந்தியா: அறிமுகம் பிரதிகா அமர்க்களம்
வதோதரா: ஜிம்பாப்வே அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அறிமுக வீராங்கனை பிரதிகா ராவல் சதம் விளாசி அசத்தினார். கொடாம்பி அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஜிம்பாப்வே 49.5 ஓவரில் 197 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பிஸா 62, மவுங்கா 29, மாடெஸ்டர் 25, சிபோ முகெரி 21 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இந்திய பந்துவீச்சில் ஸ்ரீ சரணி 4, கிராந்தி 3, தீப்தி 2, ஷபாலி 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய இந்தியா 27.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்து எளிதாக வென்றது. கேப்டன் மந்தனா 32 ரன் எடுத்து அவுட்டானார். அறிமுக வீராங்கனை பிரதிகா ராவல் 100 ரன் (96 பந்து, 15 பவுண்டரி), ஷபாலி வர்மா 64 ரன்னுடன் (33 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பிரதிகா ராவல் ஆட்டநாயகி விருது பெற்றார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி இதே மைதானத்தில் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது.