நவ.12-ல் தொடங்கும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை கட்சியினர் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும்
சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நவ.12-ல் தொடங்கும் நிலையில், அப்பணியை அதிமுகவினர் பொறுப்புணர்வோடு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, வரும் ஜன.1-ம் தேதி தகுதி ஏற்படுத்தும் நாளாகக்கொண்டு, புகைப்பட வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி, நவ.12-ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
நவ.12 முதல் டிச.11-ம் தேதி வரை ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகளை (திருத்தம் கோரி) விண்ணப்பிக்கலாம். ஏற்புரைகள் மற்றும் மறுப்புரை விண்ணப்பங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள நவ.21, 22, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.4-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், தொண்டர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்களும் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த ஒரு மாதத்தில் 18 வயது பூர்த்தியானவர்கள், 17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களையும், இளம் பெண்களையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
ஒரு நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்யப்பட்டுள்ளதை அடையாளம் கண்டு நீக்கவும், வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சரிசெய்வதற்கும் தேவையான படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து, சிறப்பு முகாம்களில் வழங்கி இப்பணியை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும்.
அதேபோல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில் அத்து மீறல்கள் ஏதேனும் இருப்பதாகத் தெரியவந்தால், உடனுக்குடன் அதுதொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து உரிய தீர்வுகாண வேண்டும்.
அதிமுக சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்படாத வாக்குச்சாவடிகளில், உடனடியாக நியமித்து, அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் கட்சி சார்பில் ஆங்காங்கே வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தல் உள்ளிட்ட பணிகளை முனைப்போடு மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த பொறுப்புணர்வோடு முழு வீச்சில் செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.