“சொந்த புத்தியும் இல்லாத, சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி தவெக அரசு” - மு.க.ஸ்டாலின் காட்டம்!
தவெக அரசை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் நாளை (31-10-26) ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “எப்போதும் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்டுவிட்டு தான் நான் பேசுவேன். ஆனால் இப்போது தமிழ்நாடு இருக்கிற நிலையை பார்த்து நான் அப்படி கேட்டேன் என்றால் கிண்டல் செய்கிறீர்களா என்று நீங்களே திருப்பி கேட்பீர்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை, வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்வு இவற்றை கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறப் போகிறது.
சினிமாவில் ஹீரோவாக இருந்தவர் நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார் என்று நினைத்து சில லட்சம் பேர் செய்த தவறால் ஒட்டுமொத்த மக்களையும் பாதித்துக் கொண்டிருக்கிறது. தவெக ஆட்சி அமைவதற்கு முன்பு அந்த கட்சித் தலைவர் விஜய், எல்லா கூட்டங்களிலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, குழந்தைகள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, போதைப் பொருட்களால் குற்றங்கள் நடக்கிறது என இதை மட்டும் தான் தொடர்ந்து பேசி ஆட்சிக்கு வந்தார். இப்படி கத்தி கத்தி பஞ்ச் டயலாக் பேசியவரின் ஆட்சியில் பட்டப்பகலில் கொடூர கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், தனியாக வசிப்பவர்களின் முதியோர்களை கொலை செய்து நகைகளை கொள்ளை அடிப்பது என எல்லாமே சர்வசாதாரணமாக நடக்கிறது. சிறுமிகள் தொடர்ந்து காணாமல் போகிறார்கள். குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட இந்த அரசு மேல் பயம் இல்லை. கிரிமினல்கள் இதை அவர்களுக்கான ஆட்சியாக கொண்டாடுகிறார்கள்.
இந்த காட்சிகளை எல்லாம் முதல்வர் பார்க்கிறாரா?இல்லையா என்று கூட நமக்கு தெரியவில்லை. இந்த செய்திகள் அவர் காதுக்கு போகிறதா என்று சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில் இப்படி எதுவுமே நடக்காத மாதிரி தான் அவருடைய செயல்பாடுகள் இருக்கிறது. அனைத்து கட்சிகளும் அறிக்கை விடுகிறார்கள், கண்டனம் தெரிவிக்கிறார்கள், போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் முதல்வரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இன்னும் சினிமா சூட்டிங் டைமில் கேரவேனில் போய் மணிகணக்கில் உட்கார்ந்திருக்கிற மாதிரி யாராலும் அணுக முடியாமல் இருக்கிறார். காவல்துறைக்கு முதல்வர் தான் பொறுப்பு, அவர் பதில் சொல்ல வேண்டுமா? இல்லையா? அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி உரிய உத்தரவை போட வேண்டுமா? இல்லையா? ஆனால் இது எதுவுமே நடப்பது இல்லை. எல்லா துறைகளுக்கும் ஒரு சில அமைச்சர்கள் தான் பதில் சொல்கிறார்கள். அந்த பதிலும் பொறுப்பற்ற பதில்களாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்து 6 மாதம் ஆகப்போகிற நிலையிலும் எல்லாவற்றுக்கும் திமுக, திமுக சொல்வது தான் இவர்களிடம் உள்ள இருக்கக்கூடிய ஒரே பதில்.
பாதிக்கு பாதி குற்றச் சம்பவங்களில் தவெக கட்சிக்காரர்கள் தான் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எங்கேயும் போக தேவையில்லை, தன்னுடைய கட்சியில் இருப்பவர்களை கட்டுப்படுத்தினாலே குற்றங்கள் பெருமளவு குறையும். பெண்களை தவெக காப்பாற்ற வேண்டும், தவெகவிடம் இருந்து பெண்களை காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு மட்டுமில்லாமல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு விலைவாசியும் உயர்ந்திருக்கிறது. இதனால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பண வீக்கம் குறைவாக இருக்கிற மாநிலமாக தமிழ்நாட்டை வைத்திருந்தோம். ஆனால் இப்போது இருக்கக்கூடிய ஆட்சியாளர்களுக்கு எந்த துறையிலும் நிர்வாகத் திறன் இல்லை. நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு மூடர் கூட்டத்தின் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடக்கிறது. இந்த தவெக ஆட்சி, சொந்த புத்தியும் இல்லாத சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி ஆட்சி. இந்த ஆட்சியின் குறையை சொல்லிக்கொண்டே போகலாம். இதை எதிர்த்து தான் 31ஆம் தேதி திமுக நடத்துகிற ஆர்ப்பாட்டம் என்பது இந்த அரசுக்கான எச்சரிக்கை மணி. இதை வேக்கப் காலாக முதலமைச்சர் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். ஆள தெரியாத அரசுக்கு பாடம் புகட்டுவோம். முதலமைச்சரையும் தூங்கி வழிகிற ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்புகிற அளவுக்கு 31ஆம் தேத் நம்முடைய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று கூறினார்.