விமானி, பெங்களூருவை சேர்ந்த 5 பேர் பலி
சமோலி: உத்தரகாண்டின் பத்ரிநாத்தில் இருந்து நேற்று பிற்பகல் ட்ரான்ஸ் பாரத் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று சகஸ்திரதாரா ஹெலிபோர்ட்டுக்கு புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் விமானி ஹிமான்சு மற்றும் 5 பயணிகள் பயணம் செய்தனர். டேராடூன் நோக்கி ஹெலிகாப்டர் சென்று கொண்டு இருந்த நிலையில், ஜோஷிமாத் பள்ளத்தாக்கை கடந்தபோது அதிகாரிகளுடான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மாயமானது.
இந்நிலையில் மார்வாரி பாலத்திற்கு அருகில் உள்ள ஜேபி பவர் ஹவுஸ் அருகே மலைச்சரிவில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை மற்றும் மழையின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. பத்ரிநாத்தில் இருந்து புறப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த சமோலி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மாநில பேரிடர் மீட்பு படை, ராணுவம்,
இந்தோ திபெத்திய எல்லைக்காவல் படை ஆகியவற்றின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தொடங்கி உள்ளன. இந்த விபத்தில் விமானி உட்பட 6 பேரும் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் இருந்த பிரதாபா, சப்இன்ஸ்பெக்டர் அருண் சலுங்கே, சங்கர் கவுடா, சுதீர் மற்றும் நடராஜர் ஆகிய 5 பேரும் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நிலைமையை கண்காணித்து வருவதாகவும் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.