தமிழ்நாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற ஃபைபர் இணைப்புகளுக்குகான மானியம்: மத்திய அரசு ஒப்புதல்
TN BharatNet Subsidy: தொலைத்தொடர்புத் துறையின் (DoT) கீழ் இயங்கும் டிஜிட்டல் பாரத் நிதி (DBN), தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் (TANFINET) ஆகியவற்றுக்கு இடையே, கிராமப்புற இணைப்புக்காக பாரத்நெட் வலையமைப்பைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம், வெள்ளிக்கிழமை அன்று புது டெல்லியின் சஞ்சார் பவனில் கையெழுத்தானது.
ஐந்து லட்சம் கிராமப்புறக் குடும்பங்கள் பயனடையும்
இந்தத் திட்டம், தமிழ்நாட்டில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற வீட்டு ஃபைபர் இணைப்புகளை ஏற்படுத்த உதவும்.
இதன் மூலம் குடும்பங்கள் அதிவேக பிராட்பேண்ட் சேவைகளைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக்கப்பட்ட இந்த வலையமைப்பு, மின்-ஆளுமை, இணையவழிக் கல்வி, தொலைமருத்துவம், டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் பிற குடிமக்கள் சார்ந்த சேவைகள் உள்ளிட்ட பல டிஜிட்டல் சேவைகளை வழங்குவதை மேம்படுத்தும் என நம்பப்படுகின்றது.
4,767 கிராமங்களுக்கு தேவைக்கேற்ப இணைப்பு வழங்கும் ஏற்பாடு, கடைசி மைல் பிராட்பேண்ட் உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, போதிய சேவை கிடைக்காத பகுதிகளுக்கு டிஜிட்டல் அணுகலை விரிவுபடுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமப்புற இணைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டம்
தற்போதுள்ள பாரத்நெட் வலையமைப்பை மேம்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் விரிவுபடுத்துதல் ஆகிய நோக்கங்களுடன், திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஆகஸ்ட் 4, 2023 அன்று ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம், அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் வலுவான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற பிராட்பேண்ட் இணைப்பை உறுதி செய்வதையும், தேவைக்கேற்ப கிராமங்களுக்கும் இணைப்பை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த புதிய ஒப்பந்தமானது, 'பாரத்நெட்' (BharatNet) உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்காக மத்திய அரசு வழங்கும் நிதி மானிய உதவியுடன், மாநில அரசின் தலைமையிலான மாதிரியின் மூலம் தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கிராமப்புற தொலைத்தொடர்பு விரிவாக்கத்தில் டிஜிட்டல் பாரத் நிதியின் பங்கு
முன்பு 'யுனிவர்சல் சர்வீஸ் ஆப்ளிகேஷன் ஃபண்ட்' (USOF) என்று அழைக்கப்பட்ட 'டிஜிட்டல் பாரத் நிதி', தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் செயல்படுகிறது. இந்திய தந்தி (திருத்தச்) சட்டம், 2003-ன் கீழ் நிறுவப்பட்டு, 2002 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்த இந்த நிதி, தொலைத்தொடர்புச் சட்டம், 2023-ன் கீழ் 'டிஜிட்டல் பாரத் நிதி' என மறுபெயரிடப்பட்டது.
இதன் முக்கிய நோக்கம், தொலைத்தொடர்பு வசதிகள் போதிய அளவில் இல்லாத கிராமப்புற, தொலைதூர மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் அனைவருக்கும் தொலைத்தொடர்பு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதாகும்.
'பாரத்நெட்' தவிர, 'டிஜிட்டல் பாரத் நிதி' பல்வேறு இணைப்புத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கிறது. 4ஜி செறிவூட்டல் திட்டம் மற்றும் மொபைல் சேவைகள் பின்வரும் பகுதிகள் உள்லிட்ட பல்வேறு பகுதிகளில் கொண்டுவரப்படும்:
மேம்படுத்தப்பட வேண்டிய மாவட்டங்களின் சேவை கிடைக்காத பகுதிகள்,
தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்,
இமயமலை மற்றும் எல்லைப் பகுதிகள்,
தீவுகள் மற்றும்
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தொலைத்தொடர்பு வசதி இல்லாத இடங்கள்
தமிழ்நாட்டுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், டிஜிட்டல் முறையில் வலுவூட்டப்பட்ட சமூகத்தையும், அறிவுசார் பொருளாதாரத்தையும் உருவாக்கும் அரசின் இலக்கை மேலும் முன்னெடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, பின்தங்கிய கிராமங்கள், மலைப்பிரதேசங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.