வடகொரிய ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை: அதிபர் கிம் ஜாங் உன் திருப்தி
சியோல்: வடகொரியா தனது முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை கட்டி வருவது தொடர்பான புகைப்படங்களை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்நிலையில், அணு ஆயுதங்களை வானில் தடுத்து அழிக்கும் சக்தி கொண்ட நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளின் சோதனையை தற்போது வடகொரியா நடத்தி இருக்கிறது. நேற்று முன்தினம் மேற்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சோதனையை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார். 2 நீண்ட தூர ஏவுகணைகள் ஏவப்பட்டதில் அவை சுமார் 2 மணி நேரம் வானில் பயணித்து இலக்கை துல்லியமாக தகர்த்ததாக வடகொரியா அரசு செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ) தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஏவுகணைகளின் செயல்பட்டிற்கு அதிபர் கிம் ஜாங் உன் திருப்தி தெரிவித்ததாகவும், எந்த சமயத்திலும் போருக்கான ஆயத்த நிலையை பரிசோதிக்கும் வகையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்ததாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.