கிரிக்கெட் INDவிடம் தோல்வி.. சூப்பர் 8இல் வெளியேற்றம்.. பாக்.வீரர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் வீரர்களுக்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஒவ்வொரு வீரருக்கும் தலா 5 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. தொடரில் 20 அணிகள் பங்கேற்ற நிலையில், சூப்பர் 8 சுற்றுக்கு 8 அணிகள் முன்னேறின. இதில் குரூப் 1லிருந்து இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் குரூப் 2விலிருந்து இங்கிலாந்தும் நியூசிலாந்தும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில், இத்தொடரில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான், லீக் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது. தவிர, சூப்பர் 8 சுற்றிலும் தோல்வி கண்டு அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியது. இதைத் தொடர்ந்து அந்த அணி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே அவ்வணி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்த நிலையில், உலகக்கோப்பை தொடர் வெளியேற்றத்திற்குப் பிறகு இது மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் வீரர்களுக்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஒவ்வொரு வீரருக்கும் தலா 5 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வட்டாரங்களின்படி, வீரர்கள் நல்ல செயல்திறனுக்காக வெகுமதிகளைப் பெற்றால், மோசமான செயல்களுக்காக அபராதமும் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியதாகவும், இந்தியாவிடம் தோற்ற உடனேயே இந்த முடிவு அணிக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது பாகிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் மில்லியன் கணக்கான ஊதிய ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள். ஆனால் அவர்களின் செயல்திறன் மேம்படவில்லை. இது அதிகாரிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது. அந்த வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.