விசைத்தறிகளை நவீனமயமாக்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
Tamil Nadu government : தமிழ்நாடு அரசு, பழமையான சாதாரண விசைத்தறிகளை நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் மூலதன மானியங்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தினரும் இத்திட்டத்தில் பயன்பெற முடியும். இந்த சூழலில், சேலம் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிவிப்பில், விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தை விசைத்தறி தொழிலில் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி ஐஏஎஸ் தெரிவித்துள்ளதாவது : விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு மூன்று ஆண்டுகள் பழமையான சாதாரண விசைத்தறிகளை நவீனமயமாக்கல் திட்டத்தின் (Powerloom Modernisation Scheme) மூலம் மூலதன மானியங்கள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வரையறையின்படி, ஆண்டு தோறும் 3,000 விசைத்தறிகளை நவீனமயமாக்கும் பொருட்டு ரூ.30 கோடி நிதியும், பொது வசதி மையங்கள், தறிக்கூடங்கள் மற்றும் தரப்பரிசோதனை ஆய்வகங்களின் உள்கட்டமைப்புகளை நிறுவும் பொருட்டு ரூ.20 கோடி என மொத்தம் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விசைத்தறிகளை நவீனமயமாக்க ரூ.10 லட்சம் மானியம்
சாதாரண விசைத்தறிகளை நாடா இல்லாத ரேப்பியர் வகை (பல்வேறு உபகரணங்களை உள்ளடக்கியது) தறிகளாக நவீனப்படுத்தி மேம்படுத்துவதற்கு திட்ட தொகையில் 50% மானியம் அல்லது அதிகபட்சம் தறி ஒன்றுக்கு ரூ.1,00,000/- மானியம் என இதில் எது குறைவோ அத்தொகையினை மானியமாக வழங்கப்படும். அதிகபட்சம் ஒரு தனிநபருக்கு (விசைத்தறி நெசவு தொழில் செய்பவர்) 10 தறிகளை நவீனப்படுத்த ரூ.10.00 இலட்சம் மானியம் வழங்கப்படும்.