நவாஸ் கனி எம்.பி-க்கு எதிராக பாயும் வருமான வரித்துறை: விசாரணைக்கு எந்தத் தடையும் இல்லை- சென்னை ஐகோர்ட் உத்தரவு
மனுதாரர் இந்த வழக்கைத் தொடர வேண்டிய அவசியமே இல்லை. எங்களிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில், வருமானத்தை மறைத்தது தொடர்பாக நவாஸ் கனிக்கு எதிராக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, தனது வருமானத்தை மறைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களின்போது நவாஸ் கனி தாக்கல் செய்த வேட்புமனுக்களில் உள்ள சொத்து விவரங்களில் பெரும் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,
”2019-க்கும் 2024-க்கும் இடைப்பட்ட காலத்தில் நவாஸ் கனி சுமார் 23 கோடியே 58 லட்சம் ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார். தேர்தல் ஆணையத்திடம் அவர் தனது உண்மையான வருமானத்தை மறைத்துள்ளார்.
எனவே, இது குறித்து வருமான வரித்துறை மற்றும் சிபிஐ (CBI) விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "மனுதாரர் இந்த வழக்கைத் தொடர வேண்டிய அவசியம் இல்லை. எங்களிடம் ஏற்கனவே உள்ள ஆதாரங்களின் அடிப்படையில், வருமானத்தை மறைத்தது தொடர்பாக நவாஸ் கனிக்கு எதிராகச் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று உறுதியளித்தார்.
மேலும், நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருப்பது, வருமான வரித்துறை மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் தடையாக இருக்காது என்றும் நீதிபதிகள் இதன்போது தெளிவுபடுத்தினர்.