உள் ஒதுக்கீட்டால் ஆதிதிராவிடர்கள் பாதிப்பு: கர்நாடகாவில் 10 இடங்களில் போராட்டம்
பெங்களூரு: பட்டியலின உள் ஒதுக்கீடு காரணமாக கர்நாடகாவில் ஆதி திராவிடர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசு பட்டியலில் உள்ள 101 சாதிகளை எஸ்சி-ஏ, எஸ்சி -பி, எஸ்சி - சி ஆகிய 3 பிரிவுகளாக பிரித்துள்ளது. மொத்தமுள்ள 17 சதவீத இட ஒதுக்கீட்டில் எஸ்சி - ஏ 6 சதவீதம், எஸ்சி - பி 6 சதவீதம், எஸ்சி - சி 5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 200 புள்ளிகளைக் கொண்ட இன சுழற்சி முறையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி - ஏ பிரிவினருக்கு முன்னுரிமை அடிப்படையில் முதல் இடம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்சி - பி பிரிவுக்கு 14 இடமும், எஸ்சி - சி பிரிவுக்கு 21 இடமும் வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அரசின் இந்த முடிவால் எஸ்சி பி மற்றும் எஸ்சி சி பிரிவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட சாதியினருக்கு கிடைக்க வேண்டிய கல்வி, வேலை வாய்ப்பு இடங்கள் பறி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எஸ்சி பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்ப் பேசும் ஆதி திராவிடர், பறையர், வள்ளுவர், சாம்பவர் உள்ளிட்ட சாதியினர் பாதிக்கப்படுவதால், அம்மக்கள் கோபம் அடைந்துள்ளனர். கர்நாடக அரசின் முடிவை கண்டித்து மைசூருவில் பல்கலைக்கழக பாபாசாகேப் அம்பேத்கர் மாணவ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஷிமோகாவில் உள்ள ஆதி திராவிடர் அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஆதி திராவிட மகாஜன சபையின் மூத்த தலைவர் கோ.தேசிகன்பிள்ளை கூறுகையில், "தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையுடன் கூடிய 3 சதவீத உள் ஒதுக்கீட்டால் அங்குள்ள பறையர் உள்ளிட்ட 76 சாதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கர்நாடக அரசு முடிவால் இங்குள்ள எஸ்சி- பி பிரிவில் உள்ள சுமார் 1.5 கோடியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் பெரும் பாதகம் ஏற்படும். அதிலும் குறிப்பாக தமிழ் ஆதி திராவிடர்கள் கர்நாடகா முழுவதும் சுமார் 60 லட்சம் பேருக்கு உயர் கல்வி நிலையங்களில் கற்கும் உரிமையும், ஊக்க தொகையும், அரசு வேலை வாய்ப்பும் கிடைக்காமல் போகும். கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு இதனை திரும்ப பெறாவிட்டால், வருகிற தேர்தலில் கடும் பின் விளைவை சந்திக்க நேரிடும்" என்றார். முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூருவில் போராட்டம் நடப்பதால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான பாஜகவும், எஸ்சி பி பிரிவில் உள்ள சாதி அமைப்பினரும் காங்கிரஸுக்கு எதிராக திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்டியலின உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக மைசூருவில் நேற்று கண்டனப் பேரணி நடைபெற்றது.