“234 தொகுதிகளுக்கும் தவெகவுக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா?” - குஷ்பு சந்தேகம்
புதுச்சேரி: “தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தவெகவுக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா என்பது சின்ன சந்தேகம்தான்” என தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு விமர்சனம் செய்துள்ளார். புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் ராமலிங்கம் ராஜ்பவன் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை மேரி ஹால் நகராட்சி கட்டிடத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் இன்று தாக்கல் செய்தார். அவருடன் மத்திய அமைச்சர் மன்சுவ் மான்டியா, பாஜக தமிழக துணைத் தலைவர் குஷ்பு ஆகியோர் உடன் வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியது: “இந்த தேர்தலிலும் என்டிஏ கூட்டணிதான் வெற்றி பெறும். புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் நல்ல வளர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. ஆனால் புதுச்சேரியில் பாதுகாப்பான ஆட்சி நடக்கிறது. பெண்களுக்காக பல திட்டங்களை இந்திய அரசு கொண்டு வந்தது. இதனால் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு புதுச்சேரியில் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய்யின் தவெக தனித்து போட்டியிடுவது குறித்து கேட்டதற்கு, ‘வாழ்த்துகள்தான் சொல்ல முடியும். 234 தொகுதிகளுக்கும் அவருக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா என்பது சின்ன சந்தேகம்தான்” என்று கூறினார். திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் தமிழகத்தில் போட்டி என விஜய் கூறியுள்ளாரே என கேட்டதற்கு, “என் வழியில் நான் தான் ராஜா என கூறிக் கொள்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமை விஜய்க்கும் உள்ளது. ஆனால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறப் போகிறது. எங்கள் கூட்டணி சார்பில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி அமர்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என தெரிவித்தார். ‘இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறீர்களா?’ என்று கேட்டதற்கு, ‘கட்சிக்காக வேலை செய்கிறோம். கட்சி சொல்வதைத் தான் கேட்போம்’ என பதில் அளித்தார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் பாஜக ஆட்சியில் பங்கு கேட்குமா என்ற கேள்விக்கு, ‘இதனை முடிவு செய்ய கட்சி மேலிட பொறுப்பாளர்கள் உள்ளனர்’ என பதிலளித்தார்.