அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம்: இந்தியா வரவேற்பு
புதுடெல்லி: அமெரிக்கா - ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எட்டப்பட்டுள்ள போர் நிறுத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம். நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததைப் போலவே, தற்போது நடைபெற்று வரும் மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர பதற்றத்தைத் தணித்தல், பேச்சுவார்த்தை நடத்துதல், ராஜதந்திர அணுகுமுறை ஆகியவை இன்றியமையாதவை. இந்த மோதல் ஏற்கெனவே மக்களுக்கு அளவற்ற துயரத்தை ஏற்படுத்திவிட்டது. அதோடு, உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தக சங்கிலிகளை சீர்குலைத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற கடல்வழிப் போக்குவரத்தும், உலகளாவிய வர்த்தக ஓட்டமும் தொடர்ந்து நிலவும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.