AI-யிடம் மருத்துவ ஆலோசனை கேட்பவரா நீங்கள்?.. உயிருக்கே ஆபத்து நேரலாம் - எச்சரிக்கும் புதிய ஆய்வு
தொட்டதுக்கெல்லாம் ஏஐ இடம் அபிப்ராயம் கேட்கும் பழக்கம் இன்று பலரிடையே ஏற்பட்டுள்ளது. அது சில நேரங்களில் உதவினாலும் பல நேரங்களில் பயனில்லாத தகவலாகவே இருந்து விடுகிறது. அதை விட ஆபத்து ஏஐ தரும் பதிலை முழுமையாக நம்பி காரியத்தில் இறங்குவது. குறிப்பாக சின்ன சின்ன உடல் நல பிரச்சனை தொடங்கி மருத்துவ நுணுக்கங்கள் வரை ஏஐ இடம் கேட்டுத் தெரிந்து தமக்குத் தாமே சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அதிமேதாவிகள் அதிகம். ஆனால் ஏஐ சாட்பாட்கள் அவ்வாறு அளிக்கும் மருத்துவ மற்றும் உடல்நல ஆலோசனைகளில் 50% தவறான தகவல்கள் என புது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்விற்காக, விஞ்ஞானிகள் குழு ஜெமினி, டீப்ஸீக், மெட்டா ஏஐ, சாட்ஜிபிடி மற்றும் க்ரோக் போன்ற ஏஐ சாட்பாட்களை ஆய்வு செய்தது. அவர்கள் இந்த பாட்களிடம் உடல்நலம் தொடர்பான 10 கேள்விகளைக் கேட்டனர். புற்றுநோய் மற்றும் தடுப்பூசிகள் போன்ற தலைப்புகளில் இந்த சாட்பாட்கள் ஓரளவு சரியான பதில்களை வழங்கின. ஆனால் ஸ்டெம் செல்கள் மற்றும் ஊட்டச்சத்து போன்ற தலைப்புகளில் குறிப்பிடத்தக்க அளவில் தவறான பதில்களை வழங்கின. குறிப்பாக எக்ஸ் ஏஐ உடைய க்ரோக் சாட்பாட் எதிர்பார்த்ததை விட அதிகமான தவறான பதில்களை அளித்தது. விஞ்ஞானிகள் நடத்திய இந்த உரையாடல்கள், சாட்பாட்களின் பதில்கள் சரியானவை, சற்றே தவறானவை மற்றும் மிகவும் தவறானவை என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டன. 49.6% பதில்கள் சரியானவை, ஆனால் சிக்கலானவை எனக் கண்டறியப்பட்டது. 30% ஓரளவு தவறானவையாகவும், 19.6% மிகவும் தவறானவையாகவும் இருந்தன.
மற்றொரு முக்கியப் பிரச்சனை என்னவென்றால், இந்த செயற்கை நுண்ணறிவு உரையாடல் செயலிகள் ஒவ்வொரு பதிலையும் எல்லாம் தெரிந்தது போல மிகவும் நம்பிக்கையுடன் வழங்குகின்றன. மேலும் உண்மை அல்லாத ஆதாரங்களை அவை மேற்கோள் காட்டுகின்றன. இதனால் பயனர்கள் பெரும்பாலும் தவறான பதில்களையே சரியானவையாக ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே சொந்தமாக அவர்கள் மருந்து எடுத்துக்கொள்ளும்போது அது தீவிரமான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக்கூடும். உடல்நலப் பிரச்சனைகளுக்கு இவ்வாறு தன்னிச்சையாக செயற்கை நுண்ணறிவு பதில்களை நம்பி செயல்படுவது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதே மருத்துவர்களின் எச்சரிக்கையாக உள்ளது.