Select Location
All Locations
State
Region
City / District
பிஹார் சட்டப்பேரவை: நம்பிக்கை வாக்கெடுப்பில் என்டிஏ அரசு வெற்றி

பிஹார் சட்டப்பேரவை: நம்பிக்கை வாக்கெடுப்பில் என்டிஏ அரசு வெற்றி

பாட்னா: பிஹார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதாக வெற்றி பெற்றார்.

பிஹார் முதல்வராக இருந்த நிதிஷ் குமார் பதவி விலகியதை அடுத்து கடந்த 15-ம் தேதி மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றார் சாம்ராட் சவுத்ரி. இதையடுத்து, 243 சட்டப்பேரவை உறுப்பினர்களைக்கொண்ட சட்டப்பேரவையில், இன்று (ஏப். 24) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், சாம்ராட் சவுத்ரி தலைமையிலான அரசு எளிதாக வெற்றி பெற்றது. இதன்மூலம், பிஹாரில் என்டிஏ கூட்டணியின் ஒற்றுமை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், “வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நிலையான அரசு அவசியம். ஆனால், பிஹார் ஒரு தனித்துவமான மாநிலம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இது ஐந்தாவது முறையாக அமைந்திருக்கும் அரசாகும். இதற்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர் இருந்தார்.

தற்போது நியமிக்கப்பட்ட ஒருவர் முதல்வராகி இருக்கிறார். என்றாலும், அவருக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். லாலு பிரசாத் யாதவின் பள்ளியில் பயின்று பட்டம் பெற்ற ஒருவர், இப்பதவியை ஏற்றுக்கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் (சாம்ராட் சவுத்ரி) முதல்வராக பொறுப்பேற்பதைவிட எங்களுக்கு சிறந்த விஷயம் வேறு என்ன இருக்க முடியும்?” என தெரிவித்தார்.

தேஜஸ்வி யாதவின் உரையைத் தொடர்ந்து பேசிய முதல்வர் சாம்ராட் சவுத்ரி, “அதிகாரம் என்பது யாருக்கும் பரம்பரைச் சொத்து அல்ல. முதல்வர் பதவி என்பது 14 கோடி பிஹாரிகளின் ஆசியால் கிடைத்துள்ளது

நிதிஷ் குமார், பிரதமர் மோடி, நிதின் நபின், சிராக் பாஸ்வான், உபேந்திர குஷ்வாஹா, ஜிதன் ராம் மாஞ்சி ஆகியோரின் ஆசி எனக்கு கிடைத்துள்ளது. நிதிஷ் குமார் இல்லாவிட்டால், லாலு பிரசாத் யாதவ் முதல்வராக ஆகி இருக்க முடியுமா? லாலு பிரசாத் யாதவை முதல்வராக்கியதும் நிதிஷ் குமார்தான். லாலு பிரசாத் யாதவ் எனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு கொடுமைகளை இழைத்தார். அவ்வாறு அவர் இழைக்காமல் இருந்திருந்தால் நான் இன்று பிஹார் முதல்வராக ஆகியிருக்க மாட்டேன்” என தெரிவித்தார்.

வலுவான அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் 1968ல் பிறந்த சாம்ராட் சவுத்ரி, 1990 முதல் 1999 வரை சமதா கட்சியிலும், பின்னர் 2014 வரை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிலும், பின்னர் 2017 வரை ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலும் இணைந்து பணியாற்றியவர். 2017 முதல் இவர் பாஜகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Hindu Tamil 1 hour ago
Home Flash News