காவல் ஆணையராக அமல்ராஜ் பொறுப்பேற்பு
சென்னை: சென்னையின் 112-வது காவல் ஆணையராக ஏ.அமல்ராஜ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தில் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, சென்னை காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடக் நேற்று முன்தினம் மாற்றப்பட்டு, சிபிசிஐடி பிரிவு கூடுதல் டிஜிபி-யாக அவர் நியமிக்கப்பட்டார்.
சென்னையின் புதிய காவல் ஆணையராக ஏ.அமல்ராஜ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கூடுதல் காவல் ஆணையர்கள் கார்த்திகேயன் (போக்குவரத்து), ராதிகா (மத்திய குற்றப்பிரிவு), நரேந்திரன் நாயர் (தெற்கு), பிரவேஷ் குமார் (வடக்கு), நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர்கள் ராமமூர்த்தி, சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அவர் முதல்வர் விஜய்-யை தலைமைச் செயலகம் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். டிஜிபி அலுவலகம் சென்று டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரை சந்தித்தார்.