Select Location
All Locations
State
Region
City / District
கொலை மிரட்டல் தொடர்ச்சியாக விடுக்கப்படுகிறது: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் புகார்

கொலை மிரட்டல் தொடர்ச்சியாக விடுக்கப்படுகிறது: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் புகார்

புதுடெல்லி: தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அண்மையில் கூறும்போது, “வேலையில்லாத சில இளைஞர்கள் கரப்பான்பூச்சிகளை போல, ஒட்டுண்ணிகளைபோல சமூக வலைதளங்களில் எல்லோரையும் தாக்குகின்றனர்’’ என்று குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர் அபிஜித் தீப்கே, கடந்த 16-ம் தேதி ‘‘காக்ரோச் ஜனதா கட்சியை’’ (கரப்பான்பூச்சி ஜனதா கட்சி) சமூக வலைதளங்களில் தொடங்கினார். இந்த கட்சியில் லட்சக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். இதுதொடர்பான சமூக வலைதளங்களை 2 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

இந்த சூழலில் அபிஜித் தீப்கே சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஆன்லைனில் புதிய கட்சியை தொடங்கிய பிறகு சமூக வலைதளங்கள் வாயிலாக எனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான். எங்களது கட்சி சார்பில் முதல் கோரிக்கையை முன்வைக்கிறோம். நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும். இதுதொடர்பான ஆன்லைன் மனுவில் பொது மக்கள் கையெழுத்திட வேண்டுகிறேன். அரசு நிர்வாகத் தவறுகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.’’ என்றார். பெற்றோர் கருத்து: அபிஜித் தீப்கேவின் பெற்றோர் பகவான், அனிதா மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜிநகரில் வசிக்கின்றனர். அவர்கள் கூறியதாவது: எனது மகன் அபிஜித் அரசியலில் நுழைவதை நாங்கள் விரும்பவில்லை. அவர் ஆன்லைனில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை தொடங்கிய நாள் முதல் எங்களது தூக்கத்தை தொலைத்துவிட்டோம்.

புதிய கட்சிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் எங்களுக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. எங்கள் மகன் இந்தியா திரும்பினால் கைது செய்யப்படுவார் என்று அஞ்சுகிறோம். இந்தியாவில் இருந்தபோது ஆம் ஆத்மியில் சிறிது காலம் எங்களது மகன் பணியாற்றினார். அப்போதே நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். இவ்வாறு பெற்றோர் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறும்போது, “கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் திடீர் வளர்ச்சி வியப்பளிக்கிறது. அதன் சமூக வலைதள பக்கங்களை முடக்கக் கூடாது. இளைஞர்கள் கருத்துகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும். ஜனநாயகத்தில் அனைவரும் கருத்துகளை தெரிவிக்க உரிமை உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.


Hindu Tamil 49 minutes ago
Home Flash News