பாக். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம்: உ.பி இளைஞர் கர்நாடகாவில் கைது
பெங்களூரு: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 20 வயது இளைஞரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கர்நாடகாவில் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்தவர் சுஹைல் (20). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள ஹரிஹராவில் பணியாற்றி வருகிறார். இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் வாட்ஸ் - அப் செயலி மூலம் தொடர்பில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
வாட்ஸ்- அப்பில் பயங்கரவாத அமைப்பினருடன் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக உரையாடியதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரது நடவடிக்கையை கண்காணித்துள்ளனர். அதில் சந்தேகத்துக்கு இடமான உரையாடல்கள், தொழில் நுட்ப ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தாவணகெரே போலீஸாரின் உதவியுடன் சுஹலை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இதனிடையே, நேற்று காலையில் ஹரிஹராவில் உள்ள வீட்டில் இருந்த சுஹலை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து 1 செல்போன், 2 சிம் கார்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து தேசிய புலனாய்வு முகமை விடுத்துள்ள அறிக்கையில், ”பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளோடு சமூக வலைத் தளம் மூலம் தொடர்பில் இருப்பதாக சந்தேகத்தின் பேரில் 20 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டார். கடந்த 4-ம் தேதி கர்நாடகாவில் துமக்கூரு, தாவணகெரே ஆகிய இடங்களில் 2 பேர் இதே போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவருக்கும் தற்போது கைதான நபருக்கும் தொடர்பு இருக்கிறதா ? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.