குஜராத்தில் 5 தீவிரவாதிகள் கைது: நாடு தழுவிய குண்டுவெடிப்பு சதி முறியடிப்பு
அகமதாபாத்: இந்தியாவில் குண்டுவெடிப்பு நடத்த சதித்திட்டம் தீட்டிய 5 தீவிரவாதிகளை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் ‘ஜெய்ஷ்-இ-முகமது’ தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்தச் சதித்திட்டம் தொடர்பாக ஏற்கெனவே 8 பேரை கைது செய்திருந்த தீவிரவாத தடுப்புப் படையினர், அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் 5 பேரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பிலால் ஆபித் ஷெரா, முகமது அயூப் கடிவாலா, முகமது ஷஃபி முகி, முகமது ஹசன் கரடியா மற்றும் முகமது அயூப் சுனசரா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஜெய்ஷ்-இ-முகமது’ அமைப்புடன் இவர்களுக்குத் தொடர்பு உள்ளது. பாகிஸ்தானின் பகவல்பூரில் உள்ள இந்த அமைப்பின் தலைமையகத்துடனும், அதன் முக்கியத் தலைவர்களுடனும் இவர்கள் நேரடியாகவும், தொடர்ச்சியாகவும் பேசி வந்துள்ளனர்.
கைதான நபர்கள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்து கொண்டு, குஜராத் மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலும் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் குஜராத்திலேயே ரகசியமாக வெடிகுண்டுகளைத் தயாரித்துள்ளனர். மக்கள் இல்லாத ஒதுக்குப்புறமான இடங்களில் 6 முதல் 7 முறை அவற்றை வெடிக்க வைத்துள்ளனர். இந்தச் சோதனையில் சில குண்டுகள் வெடித்தன, சில குண்டுகள் வெடிக்கவில்லை. கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை தடயவியல் சோதனை செய்ததில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையால் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் தலைமையகம் பெரும் சேதமடைந்தது. இதனால் அந்த அமைப்பு தனது நெட்வொர்க்கை மீண்டும் உருவாக்க முயன்று வருகிறது. இந்த புனரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாகவே கைதானவர்கள் செயல்பட்டார்களா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.