Select Location
All Locations
State
Region
City / District
ஜெர்மனி காமாட்சி அம்பாள் கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட அந்நாட்டு அதிபர்!

ஜெர்மனி காமாட்சி அம்பாள் கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட அந்நாட்டு அதிபர்!

ஜெர்மனியின் நார்த் ரைன்-வெஸ்ட்ஃபாலியா மாகாணத்தில் உள்ள ஹாம் நகரில் தமிழர்கள் வழிபடும் காமாட்சி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் 2 வாரகாலம் திருவிழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு ஜூலை 26 அன்று நடைபெற்ற திருவிழாவில் ஜெர்மனி அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மேயர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜெர்மனியில் வாழும் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்படும் இந்த கோவில் திருவிழாவிற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவதாகக் கூறப்படுகிறது. 1985 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தி தொடங்கப்பட்ட இந்தக் கோவிலில், ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது. கோவிலுக்கு வந்த ஜெர்மனி அதிபர் பேசுகையில், “ஜெர்மனியின் மதப் பன்முகத்தன்மையின் முக்கிய அங்கமாக இங்குள்ள ஹிந்து சமூகத்தினர் இருக்கின்றனர். அனைவரும் சமூக ஒருங்கிணைப்பு, மதங்களிடையே ஒற்றுமையுணர்வு, சமூக நல்லிணக்கம், மரியாதை போன்றவற்றைப் பேண வேண்டும். ஒரு அண்டை வீட்டுக்காரர் எந்தளவு இணக்கமான உறவாகவும், நட்பாகவும் வளரமுடியும் என்பதற்குத் தமிழ் சமூகத்தினர் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றனர்” என்றார். அதேபோல, இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பித்து ஜெர்மனியைத் தங்கள் புதிய வீடாக அமைத்துக்கொண்ட பல தமிழர்களையும் அதிபர் நினைவு கூர்ந்தார்.

கோவிலில் அம்பாளை தரிசித்த அதிபர், அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார். அவருக்கு மாலை அணிவித்து சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ஜெர்மனியில் வளர்ந்து வரும் இந்திய வம்சாவளியினர் மீது அந்நாட்டு அதிபர் கொண்டுள்ள அக்கறையை அவரது வருகை வெளிப்படுத்தியது. தமிழகத்தைப் போன்று வண்ணமயமாக் கொண்டாடப்படும் இந்தத் திருவிழா அங்கு முக்கிய கலாசார நிகழ்வாப் பார்க்கப்படுகிறது.


Dinamani 1 hour ago
Home Flash News