‘முதல்வர் விஜய் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது, ஏனெனில்...’ - கனிமொழி விளக்கம்
சென்னை: “யாரும் கேட்காமலேயே அவசர அவசரமாகத் தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வுக் கூட்டத்தை தவெக அரசு தற்போது கூட்டியிருப்பது காவிரி பிரச்சினையில் இருந்து மக்களை திசைதிருப்பும் அரசியல் நாடகமேயன்றி வேறில்லை. இதில் திமுக பங்கேற்காது” என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்தான்.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி, தமிழகத்தின் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை அழைத்து நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தையும் சென்னையில் நடத்திக் காட்டினார். ‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் எங்கள் தலைவர் ஓரணியில் திரட்டிக் காட்டினார்.
அனைவரது எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்ட முன்வரைவை பாஜக. கொண்டுவந்தபோது, சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பணிகளுக்கு இடையிலும் இதனை எதிர்த்துப் போராடினார். கருஞ்சட்டை அணிந்து, கருப்புக் கொடி ஏற்றி, சட்ட வரைவின் நகலைக் கொளுத்தினார். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாமல் தோல்வியடையச் செய்தார். தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்ட முன்வடிவு குறித்து எந்தத் தகவலும் இல்லாத நிலையில் - அது இன்னும் கையில் கிடைக்கப்பெறாத நிலையில், இதில் புதிதாக விவாதிக்கவும் எதுவும் இல்லை.