நீண்ட காலமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வு விலக்கு கோரும் தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை: 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-க்கு முன்பிலிருந்து பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
2010 ஆகஸ்ட் 23-க்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தனித் தீர்மானத்தை இன்று சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்தார்.
இந்தத் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாமக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவைத் தெரிவித்தன. இதனையடுத்து, ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்த தீர்மானத்தின் விவரம்: தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் 23.8.2010 ஆம் தேதியிட்ட அறிவிக்கையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்குரிய ஒரு தகுதியாக ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.
ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக குறிப்பாக 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித இடையூறும் இன்றி தங்களது பணியை சிறப்பாக ஆட்சி வரும் நிலையில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி என்பது கட்டாயமாகப்பட்டுள்ள நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று 01.09.2025 ம் நாளிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது.