விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்கப்படும்: முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர் பேசுகையில், “இருசக்கர, நான்கு சக்கர வாகன உற்பத்தியில் தமிழகம் ஒரு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள், தங்களது புதிய வாகனத் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தமிழகத்தை, முதன்மை விருப்பமாகக் கருதுகின்றன.
மெட்ராஸ் இண்டர்நேஷனல் சர்க்யூட் (Madras International Circuit) சென்னைக்கு அருகில் இருங்காட்டுக்கோட்டையிலும், KARI Motor Speed Way கோயம்புத்தூரிலும், மோட்டார் பந்தயத்திற்கான முக்கியக் கட்டமைப்புகளாக உள்ளன. இந்தப் பந்தய அரங்குகளில், தேசிய அளவில் F-3, F-4 கார் பந்தயப் போட்டிகள் நடைபெறுகிறது. தற்போது மோட்டார் வாகனப் பந்தயத்திலும் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
உலகத்தரம் வாய்ந்த மோட்டார் வாகன கார் பந்தய அரங்குகளை அமைப்பதன்மூலம், சுற்றுலா, சிறப்பு வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மேம்பட வாய்ப்புகள் உள்ளது.
விளையாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தவும், தமிழக இளைஞர்களிடையே மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான அதிகரித்துவரும் ஆர்வத்தை ஊக்குவித்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கி தமிழகத்தை சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸின் முக்கிய மையமாக உருவாக்கவும், தமிழகத்தில் ஒரு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) உருவாக்கப்படும்.