சுவிட்ச் ஆஃப் செய்து எடுத்துச் செல்லலாம் - இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் செல்போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, சில புதிய கட்டுப்பாடுகளுடன் செல்போன்களை கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 1, 2026 முதல் 52 முக்கிய கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல முழுமையாக தடை விதிக்கப்பட்டு, அவற்றை வைப்பறைகளில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்ததாலும், அவசரத் தேவைகளுக்கு தொடர்புகொள்ள முடியாததாலும் கடும் சிரமங்களை சந்தித்தனர். பக்தர்களின் இந்த தொடர் சிரமங்களை அடுத்து, இந்து சமய அறநிலையத்துறை தற்போது புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, பக்தர்கள் இனி தங்களின் செல்போன்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்லலாம். இருப்பினும், கோயிலுக்குள் இருக்கும் வரை மொபைல் போன்கள் கண்டிப்பாகச் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்க வேண்டும். கோயிலுக்குள் சிலைகள் மற்றும் பூஜைகளைப் புகைப்படம் எடுப்பது, வீடியோ, செல்ஃபி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் எடுப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது. இந்த விதிகளை மீறி ரகசியமாகப் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.