ஆந்திராவில் தசராவையொட்டி நடந்த தடியால் தாக்கும் விழாவில் வாலிபர் பலி: 100 பேர் படுகாயம்
திருமலை: ஆந்திராவில் தசராவையொட்டி நடந்த தடியால் தாக்கிக்கொள்ளும் நிகழ்ச்சியில் வாலிபர் பலியானார். 100 பேர் படுகாயமடைந்தனர். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் தேவரகட்டு பகுதியில் ஆண்டுதோறும் தசரா விழாவையொட்டி ‘பன்னி’ எனப்படும் திருவிழா நடத்தப்படுகிறது. இதில் கிராம மக்கள் இருபிரிவாக பிரிந்து தடியால் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் வினோத நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி தசரா உற்சவத்திற்கு மறுநாள் இரவு ஊர் மைதானத்தில் பன்னி திருவிழா நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
இந்த மோதலில் ஆலூரைச் சேர்ந்த போத்துராஜ் (28) என்பவர் உயிரிழந்தார். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தலைமுறை தலைமுறையாக நடந்து வரும் பாரம்பரிய விழாவில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியை வருவாய்த்துறை மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு 2 பேர் இறந்தனர். இந்த ஆண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். 100 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெறுகின்றனர்.
ஆண்டுதோறும் 100 பேர் படுகாயமடைவது தவிர்க்க முடியாததாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிகாரிகள் தலைமையில் போலீசார் இணைந்து வன்முறைக்கு இடமில்லாமல் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி நடத்தப்படுகிறது. இதுபோன்ற சம்பவம் நடந்து விடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது’’ என்றனர்.