South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

நிறம் மாறும் சினிமா - 15 | மணிரத்னத்தின் பிளாஸ்டிக் சினிமாக்களும், இந்து தேசியமும்!

நிறம் மாறும் சினிமா - 15 | மணிரத்னத்தின் பிளாஸ்டிக் சினிமாக்களும், இந்து தேசியமும்!

கரு.பழனியப்பன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘பார்த்திபன் கனவு’. நாயகன் ஸ்ரீகாந்த் சாலையில் பார்க்கும் நாயகி சினேகாவின் மீது காதல்வயப்படுவார். எதேச்சையாக அவர் வீட்டில் பார்க்கும் பெண்ணும் சினேகாவேதான் என்பதை அறிந்து ஆனந்தம் கொள்வார். ஆனால், திருமணத்துக்குப் பிறகுதான், தனது மனைவி, தான் காதலித்த அதே பெண் அல்ல, அந்தத் தோற்றத்தில் உள்ள இன்னொரு பெண் என்பது தெரியவரும். திருமணத்துக்கு முன்பு சினேகாவின் தனிப்பட்ட ரசனைகளைத் தெரிந்துகொள்வதற்காக அவரை அறியாமலே பின்தொடர்வார். திருமணத்துக்குப் பிறகு தனக்கு வாய்த்த மனைவி, தான் காதலித்த பெண்ணைப்போல் நவீனமான ரசனைகொண்டவர் அல்ல என்பதை அறிந்து நொந்துபோவார். ஸ்ரீகாந்தின் ‘காதலி’யான சினேகா, மணிரத்னத்தின் ரசிகை. ‘மனைவி’ சினேகாவோ பாக்கியராஜின் ரசிகை. மணிரத்னத்தின் படங்களை ரசிப்பது நவீனமான உயர்தர ரசனை என்பது தமிழ்ப் பொதுப்புத்தி என்பதற்கான எளிய உதாரணம் இது.

மணிரத்னம் தமிழ் சினிமாவில் பல நவீனமான மாற்றங்களை ஏற்படுத்திய இயக்குநர். ரஜினி, கமல், இளையராஜா வரிசையில் ‘சார்’ போட்டு அழைக்கப்படக்கூடியவர் மணிரத்னம். சிலர் மணிரத்னம் படம் குறித்த விமர்சனத்தில்கூட ‘மணி சார்’ என்று எழுதக்கூடிய அளவுக்கு மதிக்கப்படக்கூடியவர். உண்மையில் மணிரத்னம் படங்களுக்குத் தமிழ் சினிமாவில் என்ன இடம்?

மணிரத்னத்தின் படங்கள் நடுத்தர வர்க்கம் மற்றும் உயர்நடுத்தர வர்க்கத்தை மையமாகக்கொண்டவை. ஸ்டூடியோவுக்குள் சுழன்றுகொண்டிருந்த தமிழ் சினிமாவை கிராமத்துத் தெருக்களுக்குக் கொண்டுவந்த பாரதிராஜா, நடுத்தரவர்க்கக் குடும்பத்துப் பிரச்னைகளைத் தனக்கே உரிய நாடகப்பாணியில் படமாக்கிய பாலச்சந்தர் என்ற இரு ஆளுமைகளின் காலத்தில் மணிரத்னத்தின் வருகை நிகழ்ந்தது. இந்த இரண்டு பாணிகளில் இருந்தும் மாறுபட்ட ஒரு பாணியைக் கைக்கொண்டதால் மணிரத்னத்தின் படங்கள் தனித்துத் தெரிந்தன

மணிரத்னம் படங்கள்!
மணிரத்னத்தின் படங்களில் முக்கியமானது ‘மௌன ராகம்’. அதற்கு முந்தைய படமான ‘இதயகோயி’லில் தன் காதலி இறந்த சோகத்தில் தவிக்கும் மோகன், கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு ராதாவைக் காதலிப்பார். அதைத் தலைகீழாக்கி ‘மௌன ராக’த்தில் காதலன் இறந்த சோகத்திலிருந்து மீண்டு கணவன் மோகனின் உணர்வுகளை ரேவதி புரிந்துகொள்வதாகக் காட்சிப்படுத்தியிருப்பார். ஆனால், பெரும்பாலும் ஆணின் காதல்களும் காதல் தோல்விகளும் மட்டுமே பேசப்பட்டு வந்த தமிழ் சினிமாவில் திருமணமான பெண்ணின் முன்னாள் காதல் பற்றிப் பேசியது தமிழ் சினிமாவில் நிகழ்ந்த அபூர்வம்தான்.

அதேபோல் ‘அஞ்சலி’ திரைப்படமும் மணிரத்னத்தின் முக்கியமான படங்களில் ஒன்று. வளர்ச்சியடையாத மனநிலை கொண்ட குழந்தையின் உணர்வுகளையும் அதைக் குடும்பமும் சூழலும் எதிர்கொள்ளும் விதத்தையும் சொன்ன ‘அஞ்சலி’ போன்ற படங்களைத் தமிழ் சினிமாவில் விரல்விட்டுக்கூட எண்ண முடியாது. மணிரத்னம் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஒளிப்பதிவு, இசை, தொழில்நுட்பம், ‘புதுமையான’ வசனங்கள் ஆகியவை அவருக்கான இடத்தை உருவாக்கின.
மணிரத்னம் முதன்முதலாக உருவாக்கிய அரசியல் சினிமா ‘ரோஜா’. இதற்குப் பிறகுதான் மணிரத்னம் தமிழகத்தைத் தாண்டி இந்திய அளவில் கவனம் பெறத் தொடங்கினார். அவரது சினிமாக்களும் ‘தமிழ் சினிமா’ என்னும் நிலையிலிருந்து ‘இந்திய சினிமா’வாக மாறியது. தமிழில் அதற்கு முன்பும் ஏராளமான அரசியல் சினிமாக்கள் வந்திருக்கின்றன. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சித்தரிக்கும் படங்கள், திராவிட அரசியல் சினிமாக்கள், பொதுவுடைமை சினிமாக்கள் ஆகியவற்றைப் பார்த்ததுதான் தமிழகம். மணிரத்னம் காலத்திலேயே மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி போன்றவர்கள் நடப்பு நிகழ்வுகளையும் அதன் அரசியல் பின்னணிகளையும்வைத்து ‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘குற்றப்பத்திரிகை’, ‘அமைதிப்படை’ போன்ற படங்களை உருவாக்கினர். ஆனால், இவையெல்லாம் வெகுசன ரசனைக்காக உருவாக்கப்பட்ட படங்களாகவும் மணிரத்னத்தின் ‘அரசியல்’ சினிமாக்கள் உயர்தர ரசனைக்கான படங்களாகவும் மதிப்பிடப்பட்டன.

📍 Pondicherry
📰 Puthiya Thalaimurai
🕒 1 day ago

Related News

தீபாவளி: அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு
தீபாவளி: அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு
14 பந்தில் 38 ரன்கள் அடித்த நடராஜன்.. ஆனாலும் UAE-யிடம் இந்தியா தோல்வி!
14 பந்தில் 38 ரன்கள் அடித்த நடராஜன்.. ஆனாலும் UAE-யிடம் இந்தியா தோல்வி!
தமிழ்நாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற ஃபைபர் இணைப்புகளுக்குகான மானியம்: மத்திய அரசு ஒப்புதல்
தமிழ்நாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற ஃபைபர் இணைப்புகளுக்குகான மானியம்: மத்திய அரசு ஒப்புதல்
⬅ Back
➕ Post Ad
To Ads ➡