கூட்டணியை பலவீனப்படுத்த முயற்சி சதி கும்பலுக்கு சரியான பாடம்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
புவனகிரி: தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரியின் மனைவி வத்சலா படத்திறப்பு விழா கீரப்பாளையத்தில் நடந்தது. இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் பங்கேற்று பேசியதாவது: திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணி இந்தியாவுக்கே ஒரு முன் மாதிரியான கூட்டணியாக இருக்கிறது. இதுபோன்ற கூட்டணி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அமையவில்லை. அமையும் வாய்ப்பும் இல்லை. 2017ல் இருந்து கடந்த 9 ஆண்டுகளாக இந்த கூட்டணி, சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு கட்டுக்கோப்பாக இயங்கி வருகிறது. வெற்றி பெற்று இருக்கிறது.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் இந்த கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும். சிதறடித்து விட வேண்டும் என்று எண்ணி பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். அந்த கும்பலுக்கு நாம் சரியான பாடத்தை புகட்ட வேண்டும். தமிழ்நாடு ஒரு மாறுபட்ட மண் என்பதை நாம் சனாதன சக்திகளுக்கு உணர்த்தியாக வேண்டும்.
இந்தக் கூட்டணியை பலவீனப்படுத்த என்ன சதிகள் செய்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து நாம் உறுதிப்பாட்டோடு களத்தில் நிற்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாட்டில் அவர்களால் காலூன்ற முடியாது என்பதை உணர்த்த வேண்டும். அதிமுக மற்றும் அவர்களுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த சக்திகளை தோளில் சுமக்கட்டும். ஆனால் தமிழ்நாட்டில் அவர்களது அரசியல் எடுபடாது. இவ்வாறு அவர் பேசினார்.அரசியல் பகுப்பாய்வு