“தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை” - டிடிவி தினகரன் அறிவிப்பு
தேனி: “வரும் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. உடன் இருப்பவர்களை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும் அவர்களை அமைச்சர்களாக பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தேனியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தேனி அருகே ஊஞ்சாம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவால் 3 முறை முதலமைச்சரான ஓபிஎஸ், இந்த இயக்கத்துக்கு நன்றிக்கடன் செலுத்தும் நேரம் வந்து விட்டது. தமிழகத்தில் நல்லாட்சி ஏற்பட ஓரணியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். அவரும் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன்.
தமிழகத்தில் நல்லாட்சி ஏற்பட எங்கள் கூட்டணியில் இணைய வேண்டும். இத்தேர்தலில் தமிழ்நாட்டுக்கு உண்மையான விடியல் வர உள்ளது. நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மோடி மாற்றுவார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. என்னுடன் இருப்பவர்களை வெற்றி பெறச் செய்து சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும். அதோடு அவர்களை அமைச்சராக பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஆனால், அதற்காக கூட்டணியில் அழுத்தம் தர மாட்டேன்.” என்றார்.