“தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்வு”– அன்புமணி கண்டனம்!
பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களின் பால் விலைகள் லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளன. ஏழை மக்கள் மற்றும் குழந்தைகளின் பசி தீர்க்கும் பால் விலையை தனியார் நிறுவனங்கள் விருப்பம் போல உயர்த்தி வரும் நிலையில், அதை தடுக்க வேண்டிய திமுக அரசு, அதன் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் கொள்கைப்படி தனியார் நிறுவனங்களில் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் அதிக அளவில் விற்பனை செய்யப்படும் தனியார் பால் நிறுவனங்களில் ஒன்று சாதாரண மக்கள் பயன்படுத்தும் 3% கொழுப்புச் சத்துக் கொண்ட நீல உறை பாலின் விலை லிட்டருக்கு 52 ரூபாயில் இருந்து 62 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பாலின் விலை 63 ரூபாயிலிருந்து ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.68 ஆக்கப்பட்டுள்ளது. 6% கொழுப்புச் சத்து கொண்ட ஆரஞ்சு உறை பாலின் விலை 72 ரூபாயில் இருந்து ரூ. 4 சேர்த்து ரூ.76 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தனியார் பால் விலைகள் உயர்த்தப்படுவது இது எட்டாவது முறையாகும். கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் பால் விலை 55% அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலையை இந்த அளவுக்கு உயர்த்துவதற்கு எந்த வித நியாயமான காரணங்களும் இல்லை. மக்களைச் சுரண்டி அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தனியார் நிறுவனங்கள் பால் விலையை இந்த அளவுக்கு உயர்த்துகின்றன. தனியார் பால் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் வெகுமதிக்காக தவம் கிடக்கும் திமுக அரசும் இந்த இரக்கமற்ற பகல் கொள்ளையை கண்டும் காணாமல் இருந்து வருகிறது.
மக்களைச் சுரண்டும் தனியார் பால் நிறுவனங்களுக்கு துணை போவதை திமுக அரசு நிறுத்த வேண்டும். தனியார் நிறுவனங்களுடன் பேசி பால்விலை உயர்வை திரும்பப் பெற செய்ய வேண்டும். மக்கள் நலனை அடகு வைத்து விட்டு, தனியார் நிறுவனங்களுக்கு துணை போகும் திமுகவை மக்கள் கடுமையாக தண்டிப்பார்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.