அரசு பல் மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பு: நோயாளிகள் அவதியடைவதாக குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தில் சென்னை, புதுக்கோட்டை, சிதம்பரத்தில் தலா ஓர் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றன. இவை தவிர அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட, தாலுகா, மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவப் பிரிவுகள் உள்ளன.
மொத்தம் 565 அரசு பல் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் 400-க்கும் மேற்பட்ட பல் மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். சிறப்பு தேர்வு மூலம் பணிநிரந்தரம் செய்யப்படாததால், அவர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
அரசு பல் மருத்துவர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்வதை ரத்து செய்ய வேண்டும். பல் மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிய பணியிடங்களில் பல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உட்பட குறைக்கப்பட்ட பல் மருத்துவர் பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும்.
அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 293-ன் மூலம் தரப்பட்ட ஊதியப்படிகளை அனைத்து பல் மருத்துவர்களுக்கும் வழங்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவர்கள் பணியிடங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.