வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சோதனை ஓட்டம் #SouthernRailway
பல்வேறு காரணங்களால் வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டம் காலதாமதம் ஆனது.
கடந்த சில ஆண்டுகளாக விரைவுபடுத்தப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வரும் நிலையில் அதனை பரங்கிமலை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. பரங்கிமலை புறநகர் ரெயில் நிலையத்தோடு இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டம் காலதாமதம் ஆனது. கோர்ட்டு வழக்குகளால் பணிகள் முடங்கிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விரைவுபடுத்தப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இத்திட்டம் தொடங்கி 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் ஒரு சில நாட்களில் இந்த வழித்தடத்தில் சேவையை தொடங்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
வேளச்சேரி-பரங்கிமலை இடையான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறப்பு ரெயில் மூலம் இன்று மதியம் 2 மணி முதல் 5.30 மணி வரை இந்த சோதனை ஓட்டம் முதன்மை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் நடக்கிறது. இந்த சோதனை ஓட்டத்தின்போது அனுமதி இல்லாத நபர்கள் யாரும் ரெயில் தண்டவாளங்களை நெருங்கவோ அதன் அருகில் வேலை செய்யவோ வேண்டாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.