தமிழகத்தில் ஜூலை 17 முதல் ஆக.30 வரை டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு
சென்னை: தமிழகத்தில் ஜூலை 17 முதல் ஆக.30 வரை டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் 1.20 லட்சம் பணியாளர்கள் 33 கேள்விகளுடன் வீடுவீடாகச் சென்று தரவுகளை சேகரிக்க உள்ளனர். இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. கடைசியாக 2011-ம் ஆண்டு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, 2021-ம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கரோனா பரவல் காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தள்ளிவைக்கப்பட்டது.
இதற்கிடையே, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று நாடுமுழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடி, மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027 நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
இப்பணிகள் ரூ.11,718.24 கோடியில் இருகட்டங்களாக நடத்தப்படும் என்றும், முதற்கட்ட கணக்கெடுப்பு இந்த ஆண்டு 2026 ஏப்ரலில் தொடங்கி, செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்பணியில் 30 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில் நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஜூலை 17 முதல் ஜூலை 31-ம் தேதி வரை மக்கள் சுயமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை இணையவழியில் பதிவிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆக.1 முதல் 30-ம் தேதிக்குள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணியில் அரசு ஆசிரியர்கள், களப்பணியாளர்கள், மாவட்டம், துணை மாவட்டம் மற்றும் மாநில அளவிலான பிற மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் என சுமார் 1.20 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.