“சென்னையின் 100 ஆண்டுகள் பழமையான மரங்கள்..” புத்தகமும், விருதுகளும்.. முதலமைச்சர் அசத்தல்!
காலத்தின் காவலர்கள் – “சென்னையின் நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் – ஒரு உயிர்த்தெழும் பாரம்பரியம்” நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.
காலத்தின் காவலர்கள் – “சென்னையின் நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் – ஒரு உயிர்த்தெழும் பாரம்பரியம்” நூலினை வெளியிட்டு, 2025-26ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் வனச்சரக அலுவலர்களுக்கு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.3.2026) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், “சென்னையின் நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் – ஒரு உயிர்த்தெழும் பாரம்பரியம்” என்ற சிறப்பு நூலை வெளியிட்டார். மேலும், 2025-26-ஆம் ஆண்டிற்கான நான்கு சிறந்த மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் 4 சிறந்த வனச்சரக அலுவலர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
“சென்னையின் நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் - ஒரு உயிர்த்தெழும் பாரம்பரியம்” நூலின் சிறப்பு :
சென்னையில் உள்ள தொன்மையான மற்றும் வரலாற்றுப் பெருமை வாய்ந்த மரங்களை பதிவு செய்து பாதுகாப்பதற்காக வெளியிடப்பட்ட “சென்னையின் நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் - ஒரு உயிர்த்தெழும் பாரம்பரியம்” என்ற சிறப்பு நூலை முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வெளியிட்டார்.
இது பசுமை தமிழ்நாடு மிஷன் (Green Tamil Nadu Mission - GTM) திட்டத்தின் கீழ், நகரங்களின் இயற்கைச் சூழல் தாங்குதிறனை வலுப்படுத்துவதோடு, நகரங்களில் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கடலோர நகரங்களில் ஒன்றான சென்னை, பல நூற்றாண்டுகளாக நகர வளர்ச்சியின் மாற்றங்களை சாட்சியாகக் கொண்டுள்ள பெரிய மற்றும் பழமையான மரங்களை இன்னும் தக்கவைத்துள்ளது. இம்மரங்கள் நகரத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு அடையாளத்தின் முக்கிய அங்கமாக விளங்குகின்றன. தலைமுறைகள் கடந்தும் நிலைத்து நிற்கும் இம்மரங்கள் நகரத்தின் மாற்றங்களை மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் சமநிலையை பேணுவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. நகர வெப்பநிலையை கட்டுப்படுத்துதல், பறவைகள் மற்றும் மகரந்த பரப்பிகளுக்கு வாழிடம் வழங்குதல், கார்பனை சேமித்தல் மற்றும் நகர வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் போன்ற பல முக்கிய சுற்றுச்சூழல் சேவைகளை இம்மரங்கள் வழங்குகின்றன.