மாதந்தோறும் ரூ.8000 உதவித்தொகை திட்டம் - தமிழ்நாடு அரசு கொடுத்த அப்டேட்
TamilNadu Government : தமிழ்நாடு அரசு தமிழறிஞர்களின் சேவையை கவுரவிக்கும் விதமாகவும், அவர்களின் முதுமை காலத்தை எந்தவித பொருளாதார சிக்கலுக்கு இடமின்றி வாழும் வகையிலும் மாதந்தோறும் 7500 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், 2024 - 2025ஆம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பட்ட 100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்குவதற்கான நிதியொப்பளிப்பு அரசாணையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 10 ஆம் தேதி சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழக அரங்கில் வழங்கினார்.
தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ; தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதுகாறும் 1534 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 2025-26ஆம் நிதியாண்டு முதல் பயனாளிகளின் எண்ணிக்கை 100 லிருந்து 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது இத்திட்டதிற்கென ஆண்டிற்கு ரூ.6,98,08,000/- தொடர் செலவினமாக அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாதம் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை
முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் உதவித்தொகை ரூ.7500/-ம், மருத்துவப்படி ரூ.500/-ம் என மொத்தம் எட்டாயிரம் ரூபாய் வழங்கப்பெறுகிறது. தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித்தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. தகைமைமேல் தகைமையாக, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ் காத்த தகைமைக்காக உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் வாழ்விணையர் / திருமணமாகாத மகள் / கைம்பெண் மகளுக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500/- மற்றும் மருத்துவப் படி ரூ.500/- என அத்திருத்தொண்டு தொடர்கிறது.