சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்ச் 14 தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்: மு.வீரபாண்டியன்
சென்னை: சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மார்ச் 14 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் இன்று (புதன் கிழமை) சென்னையில் உள்ள மாநிலக் கட்சி அலுவலகத்தில் தோழர்கள் எம்.செல்வராஜ், (திருச்சி), டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, எஸ்.கே.சிவா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை முறையே ரூ. 60, ரூ. 114.50 என உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்தையுயும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் யுத்தவெறி தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் காரணம் காட்டியுள்ளது.
இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, உயர்த்தப்பட்ட விலை உயர்வை ரத்து செய்து, தட்டுபாடு இல்லாமல் சமையல் எரிவாயு கிடைக்க, ஜாம் நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் ஏற்றுமதியை நிறுத்தி, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதையும், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் பொதுமக்கள் தேவைக்காக உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்துவதையும் உறுதி செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 14-ஆம் தேதியில் மாவட்ட, வட்ட, வட்டாரத் தலைநகர்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு முடிவு செய்கிறது. நாட்டின் நலனையும், மக்கள் நலனையும் முன்னிறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பிரிவு மக்களும் பங்கேற்று ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.