கேஸ் சிலிண்டருக்கு இறுதிச் சடங்கு: கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய நூதன ஆர்ப்பாட்டம்
நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என மத்திய அமைச்சர்கள் பொய் கூறி வருகிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து, கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடுத்துள்ள போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே மும்பையில் 50 சதவீத ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பெங்களூருவைத் தொடர்ந்து தற்போது கோவையிலும் பேக்கரிகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் அபாயம் உருவாகியுள்ளது. பல இடங்களில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றன.