‘தி கேரளா ஸ்டோரி 2’ பார்த்தவர்கள் ‘முஸ்லிம்களை புறக்கணிக்க உறுதிமொழி’ எடுக்கும் வீடியோ வைரல் - கடும் விமர்சனம்
புதுடெல்லி: ‘தி கேரளா ஸ்டோரி 2’ திரைப்படம் திரையிடப்பட்ட பிறகு, திரையரங்கில் கூடியிருந்த மக்கள் முஸ்லிம்களைப் புறக்கணிக்க உறுதிமொழி எடுக்கும் வீடியோ வைரல் ஆகியுள்ள நிலையில், அதற்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது. மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் ‘தி கேரளா ஸ்டோரி 2’ திரைப்படம் திரையிடப்பட்ட பிறகு, திரையரங்கில் கூடியிருந்த மக்கள் முஸ்லிம்களை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் புறக்கணிக்க உறுதிமொழி எடுக்கும் வீடியோ வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோ குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சையத் நசீர் ஹுசைன், ‘‘பால்கர் மாவட்டத்தின் வசாய் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் மார்ச் 10 அன்று ‘தி கேரளா ஸ்டோரி 2’ திரைப்படம் இலவசமாக திரையிடப்பட்டுள்ளது. படம் முடிந்த பிறகு படத்தைப் பார்த்தவர்கள், முஸ்லிம்களை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து கூட்டு உறுதிமொழி எடுத்ததாகக் கூறப்படுகிறது.
பாஜக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட கதையாடல்களில் முஸ்லிம்கள் அதிக அளவில் குறிவைக்கப்படுகிறார்கள். வகுப்புவாத பிளவை இது ஆழப்படுத்துகிறது. ஒரு சமூகத்தைக் களங்கப்படுத்த சினிமா ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வை மேலும் வலுப்படுத்தும் ஆபாத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் மீது உறுதியாக நிலை கொண்டுள்ளது. எந்த ஒரு சமூகத்துக்கும் எதிரான இதுபோன்ற புறக்கணிப்பு அழைப்புகள், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை நோக்கத்தையே தகர்க்கின்றன. நமது குடியரசு அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பாதுகாப்பதாகவும் இருப்பதை உறுதிப்படுத்த இத்தகைய விஷயங்கள் உறுதியாக நிராகரிக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.