O Panneer Selvam: நான் செய்த பெரிய தவறு தர்மயுத்தம் தொடங்கியது தான் - ஓபிஎஸ் வருத்தம்!
அதிமுகவில் எனக்கு எதிராக இப்படி ஒரு விஷயம் நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு தர்ம யுத்தம் தொடங்கியது தான் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதிமுகவில் எனக்கு எதிராக இப்படி ஒரு விஷயம் நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை என திமுக நிர்வாகி ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அடையாளங்களில் ஒருவராக அறியப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். அவர் தற்போது தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அப்படியாக ஒரு நிகழ்வில் பேசிய அவர், “50 ஆண்டுகாலம் அதிமுகவில் என்னுடைய பணி நிறைவாக இருந்தது. அதன் காரணமாக தான் என்னை பொதுக்குழுவில் இருந்து நீக்கினார்கள். ஜெயலலிதா எப்போது இறப்பார் என காத்திருந்து அவர் இறந்த பின்பு 2016ன் கடைசி மாதங்களில் அவர்கள் வேலைகளை ஆரம்பித்தார்கள். எனக்கு எதிராக இப்படி ஒரு விஷயம் நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் இயங்கிய நான் எத்தனையோ நிர்வாகிகளை அவரிடம் அறிமுகப்படுத்தியுள்ளேன்.
அவர்களை எம்.எல்.ஏ., எம்.பி.,யாக மாற்றியுள்ளேன்.
கிட்டதட்ட 9 அமைச்சர்களை ஜெயலலிதா தவறு செய்வதாக பொறுப்பிலிருந்து நீக்கினார். அப்போது கடந்த காலங்களில் அவர்கள் அதிமுகவுக்கு செய்த பணிகளை சொல்லி அதனை தடுத்து நிறுத்தியவன். அவர்களும் ஒன்று சேர்ந்துக்கொண்டு என்னை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள் என்பதை எண்ணும்போது நான் மிகவும் மன வருத்தப்பட்டேன். சசிகலா ஜெயலலிதா மறைவுக்குப் பின் என்னையும், 3 மாதங்களுக்குப் பின் எடப்பாடி பழனிசாமியையும் முதலமைச்சராக அமர்த்தினார். வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு தர்ம யுத்தம் தொடங்கியது தான்.
அந்த நேரத்தில் இபிஎஸ் முதலமைச்சராக இருந்தார்.
அவர் மீது நாங்கள் தான் முதலில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். அப்போது நானும் டிடிவி தினகரனும் சேர்ந்தால் பழனிசாமி அமைச்சரவை கலைந்து விடும் சூழல் இருந்தது. அதற்கு முன்னால் என்னை சந்தித்து அதிமுக பிளவுப்பட்டு இருக்கிறது. நீங்கள் ஒப்புக்கொண்டால் ஒன்றுப்பட்டு செயல்படலாம் என எடப்பாடி பழனிசாமி சொன்னார். பலர் அவரை ஆதரிக்க வேண்டாம் என கூறினார்கள். அந்த நேரத்தில் நான் ஆதரவு கொடுத்ததால் தான் நான்கரை ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார்.
அந்த நன்றி கூட இல்லாமல் அவர் ஆரம்பத்தில் இருந்து என்னை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் செயல்பட்டார்.
அதைத்தான் நான் எதிர்த்தேன். அரசியலில் நான் பழனிசாமி அரசை காப்பாற்றியது தான் தவறு.
நான்கரை ஆண்டுகள் அவர் என்ன செய்தாலும் என்னால் கட்சி பிளவுப்படக்கூடாது என்பதற்காக நான் எதையும் கண்டுகொள்ளாமல் எந்த பிரச்னையும் வரக்கூடாது என இருந்தேன். 2021 தேர்தல் ஓராண்டு வருவதற்கு முன் ஒற்றை பொதுச்செயலாளர் பதவி என்ற பிரச்னையை கிளப்பினார்கள். அதுபற்றி நான் கேள்வியெழுப்பினேன். அதை கண்டுக்கொள்ளவில்லை. அதன்பின் 2021 சட்டமன்ற தேர்தலில் பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என சொன்னார். நான் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திப்போம் என சொன்னேன். சொன்னதை மீறி அறிவித்தார்கள்” என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.