யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு
சென்னை: இசைக் கருவி தயாரிப்பு நிறுவனமான யமஹா மியூசிக் இந்தியா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை தனது விளம்பரத் தூதராக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி இசைக் கருவி நிறுவனமாகத் திகழ்ந்து வரும் யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின், விளம்பரத் தூதருக்கான ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்றது.
இதில், யமஹா மியூசிக் இந்தியா நிறுவனம், தனது விளம்பரத் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அறிவித்தது. இதற்கான ஒப்பந்தத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டகெதோஷி யமமோட்டோ ஆகியோர் கையெழுத்திட்டனர். பின்னர், நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது: எனது 12 வயதில் இருந்தே யமஹா இசைக் கருவிகள் எனது இசைப் பயணத்தின் ஓர் அங்கமாக இருந்து வருகின்றன. அப்படி 1973-ல் தொடங்கிய பயணம், ஆர்கன்கள், மியூசிக் கம்யூட்டர்களிலிருந்து தற்போது பயன்படுத்தும் மான்டேஜ் சி7 பியானோக்கள் வரை தொடர்கிறது.
இந்த ஸ்பான்சர்ஷிப் மூலம், எனது இசைப் பள்ளியும் யமஹா இசைக் கருவிகளை பயன்படுத்தும் வாய்ப்பை தற்போது பெற்றுள்ளது. இங்கு மாணவர்களுக்கு சிறந்த தரமான இசைக் கருவிகள் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இந்திய மாணவர்கள் உலகத் தரத்தில் ஜொலிக்க வேண்டும். சென்னை கலை தலைநகரம் சென்னையை உலகின் கலைத் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பது என் கனவு. இதற்காக எங்களது பள்ளியில் இசைக்குழுவை உருவாக்கி வருகிறோம்.
இன்றைய காலத்தில் ஏஐ மூலம் பாடல்களை உருவாக்கலாம். ஆனால் ஒரு மனிதன் மேடையில் பாடும்போதும், இசையை வாசிக்கும்போதும் கிடைக்கும் நேரடி அனுபவம் மிகவும் மதிப்புமிக்கதாகும். ஏஐ தொழில்நுட்பத்தால் ஒருபோதும் மனித உணர்வுகளைப் பிரதிபலிக்க முடியாது. காலங்கள் மாறினாலும் மனித உணர்வுகளுக்கான மதிப்பு அதிகரிக்கவே செய்யும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டகெதோஷி யமமோட்டோ பேசுகையில், “யமஹா வெறும் இசைக் கருவிகளை விற்பனை செய்யும் நிறுவனம் மட்டுமல்ல, இசையின் மூலம் மக்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகும்.
யமஹாவுக்கு இந்தியச் சந்தை மிகவும் முக்கியமானது. இந்தியாவில் இசைக் கல்வியை ஊக்குவிப்பது மற்றும் உயர்தர இசைக் கருவிகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதே எங்களது நோக்கம். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விளம்பரத் தூதராக நியமித்திருப்பது இசையின் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள நினைக்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார். இந்நிகழ்வில், யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைவர் ரியோஜி மருயாமா, இசையமைப்பாளர் குல்ராஜ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.