தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு - நாடாளுமன்றத்தில் கனிமொழி நோட்டீஸ்
தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து முதலமைச்சர் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற சிறப்பு அமர்வு இன்று நடைபெறுகிறது. சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தவது தொடர்பாக தொகுதி மறுவரையறை செய்வது (மக்களவை தொகுதிகளை 850 ஆக அதிகரிப்பது) குறித்த அரசியல் சட்ட திருத்தங்கள் முன்மொழியப்பட உள்ளது. இது தொடர்பாக அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்த மசோதாக்கள் உறுப்பினர்களின் பார்வைக்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு ஆடை அணிந்து கருப்புக்கொடி ஏற்றினார். தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து முதலமைச்சர் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி நோட்டீஸ் வழங்கி உள்ளார். தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் நோட்டீஸ் வழங்கி உள்ளார்.