வர்த்தக சிலிண்டர் முறைகேடாக ரூ.7,000-க்கு விற்பனை: கோவையில் தொடரும் தட்டுப்பாடும் பாதிப்பும்
கோவை: கோவையில் முறைகேடாக வணிக காஸ் சிலிண்டர்கள் ரூ.7 ஆயிரம் வரை விற்பதால், வணிகர்கள் மற்றும் தொழில்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகரில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. வணிக ரீதியாக இயங்கும் தெருவோர தேநீர் கடைகள் தொடங்கி, நடுத்தர உணவகங்கள், உயர் தர உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வரை காஸ் சிலிண்டர் அத்தியாவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வணிக காஸ் சிலிண்டருக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், வெளிச்சந்தையில் முறைகேடாக விற்கப்படும் சிலிண்டரின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இதுதொடர்பாக, கோவையை சேர்ந்த வணிகர்கள் கூறியதாவது: ஒரு கடை நடத்துபவர் ஒரு சிலிண்டரை பதிவு செய்து வாங்கி 5 நாட்களுக்குள் தீர்ந்துவிட்டால், அடுத்ததாக சிலிண்டரை முறைப்படி பதிவு செய்தால் கிடைப்பதில்லை. வணிக காஸ் சிலிண்டர் உடனடியாக கிடைக்காததால், பலரும் தொய்வின்றி தொழில் செய்ய வேண்டிய நெருக்கடியால் வேறு வழியின்றி வெளிச்சந்தையில் மிக அதிகவிலைக்கு வணிக காஸ் சிலிண்டரை வாங்க வேண்டியுள்ளது. பல இடங்களில் ஏஜெண்டுகள் போல் சிலர் கமிஷன் பெற்றுக்கொண்டு சிலிண்டர்களை வழங்கி வருகின்றனர். தற்போது ஒரு வணிக காஸ் சிலிண்டர் ரூ.5,500-ல் தொடங்கி ரூ.7 ஆயிரம் வரை முறைகேடாக விற்கப்படுகிறது.
உரிய நடவடிக்கை
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: வீட்டு சிலிண்டர்களுக்கு உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து தொய்வின்றி சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. வணிக ரீதியான பயன்பாட்டுக்கு தொழில் நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களிடம் காஸ் பெற்று வந்த நிலையில், தற்போதைய தட்டுப்பாட்டை காரணங்காட்டி அந்த காஸ் நிறுவனங்கள் மூடியுள்ளன.
இதனால் அங்குள்ள வாடிக்கையாளர்களும் எங்களை நாடி வருகிறார்கள். ஆனால் எங்களது பல ஆண்டுகால வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய பிறகே, புதிய வாடிக்கையாளர்களுக்கு காஸ் தர முடியும்.
முறைகேடாக அதிக விலைக்கு காஸ் சிலிண்டர்கள் விற்பது தொடர்பாக அந்தந்த மாவட்ட அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.