மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: ராகுல் வீடு நோக்கி பாஜக பெண் தலைவர்கள் பேரணி
புதுடெல்லி: மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன. இதனால் இந்த மசோதா தோல்வியடைந்தது. இந்நிலையில், பாஜக நாடாளுமன்ற எம்.பி.க்கள் ஹேமமாலினி மற்றும் பன்சூரி ஸ்வராஜ் உள்ளிட்ட பெண் தலைவர்கள், டெல்லியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வீட்டை நோக்கி நேற்று ஒரு பிரம்மாண்டமான போராட்டப் பேரணியை நடத்தினர். அப்போது ராகுல் வீட்டில் இல்லை.
வீதிப் போராட்டங்கள் முதல் சமூக வலைதளங்கள் வரை காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் மீது பாஜக கடுமையான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. பாஜகவின் டெல்லி பிரிவு எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஒரு போஸ்டரில், ராகுலை ‘துரோகி' என்று குறிப்பிட்டுள்ளது. அந்தப் பதிவில் ‘‘பெண் சக்திக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டைத் தடுத்த இந்த வில்லன்களை நாட்டின் சரிபாதி மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது. டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, கட்சி பெண் தலைவர்களுடன் இணைந்து இந்தப் பேரணியில் பங்கேற்றார்.
இந்த போராட்டத்தில் எம்.பி.க்கள் கமல்ஜீத் செராவத், மஞ்சு சர்மா, கவுன்சிலர் யோகிதா சிங் மற்றும் கட்சியின் துணைத் தலைவர் லதா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் கைகளில் கருப்புக் கொடிகளையும், நெற்றியில் கருப்புப் பட்டைகளையும் கட்டியிருந்தனர். எதிர்க்கட்சிகள் பெண் சக்தியை அவமதிப்பதாகக் கூறும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். டெல்லி முதல்வர் ரேகா குப்தாவும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினார். 3 எம்.பி.க்கள் கைது: இதனிடையே பேரணியாக சென்றவர்கள் மீது டெல்லி போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்தனர். மேலும் எம்.பி.க்கள் பன்சூரி ஸ்வராஜ், ரக்சா காட்சே, கமல்ஜீத் செரா வத் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.