ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக குறைந்த ரன்களில் ஆல் அவுட்டான 5 அணிகள்: முதலிடத்தில் ஆர்சிபி
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 75 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த ரன்களை பதிவு செய்த அணிகளின் விவரம் குறித்து பார்ப்போம். டெல்லியில் திங்கட்கிழமை அன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 75 ரன்களில் சுருட்டியது. ஆர்சிபி அணியின் அனுபவப் பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமாரும், ஹேசில்வுட்டும் டெல்லி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை கூட்டு சேர்ந்து வீழ்த்தினர். டெல்லி அணி 3.5 ஓவர்களில் 8 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
ஆர்சிபி அணி இன்னும் கொஞ்சம் கவனமாக வீசி இருந்தால் டெல்லி அணியை மிகவும் சொற்ப ரன்களில் ஆல் அவுட் செய்திருக்கலாம். ஆனால், அது ஆர்சிபி அணிக்கு கைகூடவில்லை. இதை எண்ணி ஆர்சிபி அணி ரசிகர்கள் ஆதங்கம் அடைந்தனர். ஏனெனில், ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட்டான அணி என்ற மோசமான சாதனையை தன்வசம் கொண்டுள்ளது ஆர்சிபி. அந்த அணி கடந்த 2017 சீசனில் 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. அதே நேரத்தில் டெல்லி அணி ரசிகர்களோ, நல்வாய்ப்பாக தங்கள் அணி 49 ரன்களுக்குள் ஆட்டமிழக்கவில்லை என ஆசுவாசம் கொண்டுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக குறைந்த ரன்களில் ஆல் அவுட்டான அணிகள்
>கடந்த 2008 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 67 ரன்களுக்கு ஆல் அவுட்டானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த ஆட்டம் மும்பையில் நடைபெற்றது.
>கடந்த 2017 சீசனில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி (அப்போது டெல்லி டேர்டெவில்ஸ்) அணியை 66 ரன்களில் சுருட்டியது மும்பை அணி.
>கடந்த 2023 சீசனில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை 59 ரன்களில் ஆட்டமிழக்க செய்தது ஆர்சிபி. >முன்னதாக, இதே ராஜஸ்தான் அணியை கடந்த 2009 சீசனில் 58 ரன்களுக்கு ஆல் அவுட் செய்திருந்தது ஆர்சிபி. >கடந்த 2017 சீசனில் கொல்கத்தாவில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியை 49 ரன்களில் ஆல் அவுட் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.