‘காங்கிரஸ் பெண்களுக்கு எதிரானது என்பதை சசி தரூர் ஒப்புக்கொண்டார்’ - கிரண் ரிஜிஜு
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் 131-ஆவது அரசியலமைப்புத் திருத்த மசோதா கடந்த 17ஆம் தேதி மக்களவையில் தோல்வியடைந்தது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அரசியலமைப்பு சட்டத் திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை (அதாவது 352 வாக்குகள்) கிடைக்காததால் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.
இந்த தோல்விக்கு முக்கிய காரணம், வெறும் இட ஒதுக்கீட்டை மட்டும் வழங்காமல், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக உயர்த்துவது மற்றும் தொகுதி மறுசீரமைப்பைக் கோரியது. இந்த மசோதா தோல்வி அடைந்ததில் இருந்து காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எதிரானது என பாஜக குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஒப்புக்கொண்டதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,
“நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, தரூர் என்னிடம், 'காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எதிரானதாக இருக்கலாம், ஆனால் எந்தப் பெண்ணும் சசி தரூரை பெண்களுக்கு எதிரானவராகக் கருத மாட்டார்கள்' என்று கூறினார். அதற்கு நான், 'ஆம், உங்களை யாரும் பெண்களுக்கு எதிரானவர் என்று அழைக்க மாட்டார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் உங்கள் கட்சி பெண்களுக்கு எதிரானது' என்று கூறினேன்.” என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எதிரானதாக இருந்தாலும், பெண்கள் சசி தரூரை பெண்களுக்கு எதிரானவராகக் கருத மாட்டார்கள் என்பதே அவரது கருத்தாக இருந்தது. அப்படியென்றால் அதன் அர்த்தம் என்ன? ஒரு வகையில், காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எதிரானது என்பதை அவரும் ஏற்றுக்கொண்டார் என்பதே அதன் அர்த்தம். அவர் தனிப்பட்ட முறையில் பெண்களுக்கு எதிரானவராக இல்லை என்பதே நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவரது கட்சி பெண்களுக்கு எதிரானதே” என ஏஎன்ஐ நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.