Select Location
All Locations
State
Region
City / District
ஒன்றிய அரசு ஊழியர்களை மட்டுமே வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடுத்தும் உத்தரவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஒன்றிய அரசு ஊழியர்களை மட்டுமே வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடுத்தும் உத்தரவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்களாக ஒன்றிய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஒவ்வொரு மேசையிலும் குறைந்தது ஒரு மேற்பார்வையாளர் அல்லது உதவியாளர் ஒன்றிய அரசு அல்லது பொதுத்துறை நிறுவன ஊழியராக இருக்க வேண்டும் என மேற்கு வங்க கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து திரிணாமுல் தொடர்ந்த வழக்கை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஏப்ரல் 30 அன்று தள்ளுபடி செய்தது. தேர்தல் பணிகளில் யாரை நியமிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் தனிப்பட்ட அதிகாரம் என்றும், இதில் சட்டவிரோதம் ஏதுமில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கவும் கோரியுள்ளது. மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், நாளை காலை 10:30 மணிக்கு நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜோய்மால்யா பாக்சி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

மேற்கு வங்கம் உட்பட தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கும் மே.4 வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.


Malaimalar 1 hour ago
Home Flash News