Select Location
All Locations
State
Region
City / District
மகளிர் டி20 உலகக் கோப்பை: ஹர்மன்பிரீத் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு

மகளிர் டி20 உலகக் கோப்பை: ஹர்மன்பிரீத் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு

மும்பை: மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரையில் இங்கிலாந்தில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 33 ஆட்டங்கள் இந்த தொடரில் நடைபெறுகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த 2009 முதல் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி கடந்த 2020-ல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி ஆறு முறை இதில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் நியூஸிலாந்து அணிகள் தலா ஒரு முறை பட்டம் வென்றுள்ளன. முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வகையில் இந்திய அணி இந்த தொடரில் களம் காண்கிறது.

இந்திய அணி விவரம்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷெபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பார்தி ஃபுல்மாலி, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஸ்ரீ சரணி, யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நந்தினி சர்மா (அறிமுக வீராங்கனை), அருந்ததி ரெட்டி, ரேணுகா தாக்குர், கிரந்தி கவுட், ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ்.

இந்திய அணியை பொறுத்தவரையில் அருந்ததி ரெட்டி, ரேணுகா தாக்குர், கிரந்தி கவுட், நந்தினி சர்மா (அறிமுக வீராங்கனை) ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சு வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இதில் நந்தினி சர்மா, மகளிர் பிரீமியர் லீக் 2026 சீசனில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் அவர் இந்திய அணியில் இப்போது இடம்பெற்றுள்ளார்.

தீப்தி, ஸ்ரீ சரணி, ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ் ஆகியோர் சுழற்பந்து வீச்சு வீராங்கனைகளாக உள்ளனர். ஸ்மிருதி, ஷெபாலி, யஸ்திகா பாட்டியா ஆகியோர் டாப் ஆர்டரிலும், ஜெமிமா, ஹர்மன்பிரீத், பார்தி, ரிச்சா கோஷ் ஆகியோர் பேட்டர்களாக அணியில் இடம்பிடித்துள்ளனர்.


Hindu Tamil 5 hours ago
Home Flash News